ஆராய்ச்சி திரைப்பட விமர்சனம்
மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்களான நாயகன் அனீஷ் மற்றும் நாயகி மனிஷாஜித் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். எச்.ஐ.வி நோயை குணப்படுத்தக் கூடிய மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் அனீஷ் ஈடுபடுகிறார். அவருக்கு மூத்து மருத்துவ நிபுணர் உதவி செய்கிறார். நாயகி மனிஷாஜித் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மீது கூடுதல் அக்கறை எடுத்துக்கொண்டு கவனிக்கிறார். இதற்கிடையே மாணவர்கள் கிராமம் ஒன்றில் மருத்துவ முகாம் நடத்துவதற்காக செல்கிறார்கள்.  அந்த கிராமத்தின் தலைவர் வெடிமுத்துவின் மகன் நாயகன் முத்து பாரதி பிரியன் நாயகி மனிஷாஜித்தை ஒருதலையாக காதலிக்கிறார்.
இந்த நிலையில், எதேச்சையாக மனிஷாஜித்தின் இரத்தம் பரிசோதனை செய்யும் போதும அவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது தெரிய வருகிறது. தனக்கு எப்படி எச்.ஐ.வி நோய் வந்தது என்று தெரியாமல் குழப்பமடையும் மனிஷாஜித், நாயகன் அனீஷ் தான் தனது ஆய்வுக்காக தன் உடலில் எச்.ஐ.வி கிருமியை செலுத்தியிருக்க வேண்டும், என்று நினைத்து அவரை வெறுக்கிறார். இந்த விசயங்கள் எதுவும் தெரியாத முத்து பாரதி பிரியன் மனிஷாஜித்தை ஜீவிரமாக காதலிக்க, அவருடைய காதல் ஜெயித்ததா?, மனிஷாஜித்தின் நிலைக்கு காரணம் யார்?, அனீஷ் எய்ட்ஸ் நோய்க்கான மருந்து கண்டுபிடிப்பில் வெற்றி பெற்றாரா? என்பதை சொல்வது தான் படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் முத்து பாரதி பிரியன் பக்கத்து வீட்டு பையன் போல் எளிமையாக இருப்பதோடு, இயல்பாக நடித்து கவர்கிறார். மருத்துவ முகாம் நடத்துவதற்காக தன் கிராமத்துக்கு வரும்  நாயகி மனிஷாஜித்தை ஒருதலையாக காதலிக்கும் அவர், காதல் கனவில் மிதக்கும் காட்சிகள் அனைத்தும் சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கிறது. அதிலும், எப்போதும் கூளிங்கிளாஸ் போட்டுக்குக் கொண்டு வலம் வருவதோடு, தலையை சாய்த்து விசில் அடிக்கும் விதம் அமர்க்களம்.
மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் அனீஷ், கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். எட்ய்ஸ் நோய்க்கான மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டுபவர்,  காதலியின் கோபத்திற்கான காரணம் தெரியாமல் தடுமாறும் இடங்களில் நேர்த்தியாக நடித்து பாராட்டு பெறுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் மனிஷாஜித், அழுத்தமான கதாபாத்திரத்தில் அமர்க்களமாக நடித்திருக்கிறார். நோயாளிகளிடம் ஒரு மருத்துவர் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள அவரது வேடத்திற்கு நூறு சதவீதம் நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் கூடுதல் அழகோடு ரசிகர்களை கவர்கிறவர் செண்டிமெண்ட் காட்சிகளில் அளவாக நடித்து அப்ளாஷ் பெறுகிறார்.
ஊர் தலைவர் மற்றும் மூத்த மருத்துவ நிபுணர் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் வெடிமுத்து, நடிப்பிலும், தோற்றத்திலும் வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார். ஊர் தலைவராக சரவெடிப்போல் நடித்திருப்பவர், ஆராய்ச்சியாளராக பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வாய்ப்புகள் கிடைத்தால் நிச்சயம் நல்ல காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் ஜொலிப்பார்.
வெடிமுத்துவின் மனைவியாக நடித்திருக்கும் செந்திகுமாரிக்கு வேலை குறைவு தான் என்றாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார். சிசர் மனோகர் வேடம் தேவையில்லாதது. தனியாக பயணிக்கும் அவரது கதாபாத்திரமும், அதைச் சார்ந்த காட்சிகளும் படத்தின் நீளத்தை அதிகரிப்பதை தவிர வேறு எதையும் செய்யவில்லை.

விசித்ரன் இசையில் பாடல்கள் அனைத்தும் புரியும்படியும், கேட்கும்படியும் இருப்பதோடு, மக்களுக்கு அறிவுரை சொல்லும்படிம் இருக்கிறது. பின்னணி இசையிலும் குறையில்லை. ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. எளிமையான கிராமத்து லொக்கேஷன்களை பாடல் காட்சிகளில் மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் ஒட்டுமொத்த படத்திற்கும் தனது கேமரா மூலம் கூடுதல் தரம் சேர்த்திருக்கிறார்.

படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதியதோடு, இயக்கம் மேற்பார்வை மற்றும் மருத்துவ திறனாய்வு பணிகளுடன் சேர்த்து நடிக்கவும் செய்திருக்கும் வெடிமுத்து, தனது பணிகள் அனைத்தையும் திறம்பட செய்திருக்கிறார்.

, ஹெல்மெட் அணிவது, மதுபழக்கம், அரசங்காத்தின் விதிமுறைகளை பின்பற்றுவது உள்ளிட்ட பல நல்ல அறிவுரைகளை மக்களுக்கு கூறி அவர்களுடைய தனிமனித ஒழுக்கத்திற்கு வழிக்காட்டும் வகையில் படத்தின் வசனங்களை எழுதி அதற்கு ஏற்ப காட்சிகளை வடிவமைத்திருக்கும் வெடிமுத்துவை மனதாரா பாராட்டலாம்.

சமூக அக்கறையுடன் மக்களுக்கு நல்ல விசயங்களை சொல்லும் முயற்சியான ஒரு கதையை பாடமாக அல்லாமல், அனைத்து தரப்பு மக்களும் ரசிக்க கூடிய பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் ரவி செல்வன். 

 ஒரு கதையை, இளைஞர்களுக்கு ஏற்ற வகையில், காதல் கதையுடன் சேர்த்து சொன்ன விதத்தில் இந்த ‘ஆராய்ச்சி’ ஜெயிச்சிருச்சி.

Comments

Popular posts from this blog