'லோக்கல் சரக்கு' சினிமா விமர்சனம்
குடி குடியை எப்படியெல்லாம் கெடுக்கும்; எந்தளவுக்கு கெடுக்கும் என்பதை எடுத்துச் சொல்லும் விதத்தில் உருவாகியிருக்கும் படம்.
அந்த இளைஞன் எந்த நேரமும் குடித்துக் கொண்டிருக்கிறான். குடிப்பதற்காக கைவசமுள்ள பொருட்களை விற்கிறான். யாராவது அவனை வேலையில் சேர்த்துவிட்டால் குடிப்பழக்கத்தால் அதையும் கெடுத்துக் கொள்கிறான். அவனது தங்கை தனக்கான வாழ்க்கைத் துணையை தேடிக் கொண்டு வீட்டை விட்டுப் போய்விடுகிறாள். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து குடிக்கிறான். ஊரில் எவரும் மதிக்காத நபராக மாறிப்போகிறான்.
நாட்கள் அப்படியே கடந்துகொண்டிருக்க, அவன் வசிக்கும் பகுதியில் ஒரு பெண் வீடு பார்த்து குடியேறுகிறாள். அவளிடமும் லேசாக சிநேகம் வளர்த்துக் கொண்டு குடிப்பதற்கு பணம் கேட்கிறான். அப்படியே இன்னும் சில நாட்கள் கடந்து போகிறது. 

ஒரு சந்தர்ப்பத்தில் அந்த பெண், அந்த குடிகாரனை தன் கணவன் எனவும், அவன் தனக்கு தாலி கட்டியிருப்பதாகவும் சொல்கிறாள். அவனுக்கு அவளை யாரென்றே தெரியவில்லை. சில விஷயங்களை எடுத்துச் சொன்னபின் அவன் அவளுக்கு தாலி கட்டியது உறுதியாகிறது. 

அவள் யார்? அவள் அவனுக்கு மனைவியானது எப்போது? எப்படி? என அடுக்கடுக்காய் வந்து விழும் கேள்விகளுக்கு சின்னச் சின்ன திருப்பங்களோடு சுவாரஸ்யமாய் நகரும் அடுத்தடுத்த காட்சிகளில் பதில் இருக்கிறது. இயக்கம்: எஸ்.பி.ராஜ்குமார்
கதாநாயகனாக டான்ஸ் மாஸ்டர் தினேஷ். முகம் மறைக்குமளவு தாடி மீசையோடு, உடைகளில் சுத்தமின்றி குடிகாரனுக்கான பொருத்தமான தோற்றத்தில் வருகிற அவர் குடிப்பதற்கு காசு வாங்கிக்கொண்டு யாரோ ஒருவரின் பைக்கை ஒயின்ஷாப்பில் அடகு வைப்பது, பணம் வாங்கிக் கொண்டு ஏடிஎம் அறைக்குள் ஜோடிஜோடியாய் காதலர்களை அனுமதிப்பது, துணை நடிகராக கூட்டத்தோடு கூட்டமாக போய்நின்று ஹீரோ மீது வாந்தியெடுப்பது, குடி வாசனையே பிடிக்காத ஹீரோவை குடிக்கவைப்பது என காட்சிக்கு காட்சி கலகலப்பூட்டுகிறார். தனக்கு சரக்கு வாங்கிக் கொடுப்பவன் தன் மனைவியை காமத்தோடு பார்க்கிறான் என்பது புரியாமல் அவனை வீட்டுக்கு வரவைத்து சேர்ந்து குடிக்கும்போது அந்த அப்பாவித்தனத்தாலும் கவர்கிறார். ஒருகட்டத்தில் மனம் திருந்தி உழைத்து சம்பாதிக்க முடிவெடுப்பது வழக்கமான ஒன்றாக இருந்தாலும் அந்த காட்சிகளையும் வெகுளித்தனமான நடிப்பால் ஈர்க்கும்படி செய்திருக்கிறார். பாரில் உடலழகைக் காட்டி ஆடும் பெண்ணுடன் இணைந்து போடும் குத்தாட்டமும் ரசிக்க வைக்கிறது.
கதாநாயகியாக உபாசனா. துணை நடிகையான அவர் தன் அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்காக முகம் தெரியாதவன் கட்டும் தாலியை ஏற்றுக் கொள்வது, கோபத்தாலும் அன்பாலும் கணவனை குடிப்பழக்கத்திலிருந்து மீட்டெடுப்பது, கணவன் ஆதரவோடு வீட்டுக்கு வந்த காமவெறியனை வித்தியாசமான அணுகுமுறையில் வெளியேற்றுவது, தன்னை அந்தரங்கமாக வீடியோ எடுத்தவனை ஆக்ரோஷமாக எதிர்த்து அடிபணியச் செய்வது என திறமையான நடிப்பால் தனது பாத்திரத்துக்கு உயிரூட்டியிருக்கிறார்.

கதாநாயகனுடன் சேர்ந்து குடிப்பதற்கு பயன்பட்டிருக்கிறார் நண்பனாக யோகிபாபு. தனக்குத் தெரிந்தபெண் நண்பனுக்கு மனைவியான விவரம் தெரியாமல் அவள் மீது காதல் பார்வை வீசுவதும், விவரம் தெரிந்து அதிர்வது, ஒழுங்காக வேலைக்குப் போகலாம் என முடிவெடுத்த நண்பனை வலுக்கட்டாயமாக கூப்பிட்டு ஊத்திக் கொடுத்து அவனது வேலைக்கு ஆப்பு வைப்பது என தன் பங்கிற்கு சிரிக்க வைக்கிறார்.

தன்னை மாஸ் ஹீரோ ரேஞ்சுக்கு நினைத்துக் கொண்டு சாம்ஸ் செய்கிற அலட்டலும் சிரிப்பூட்டுகிறது.

பெண்களை அந்தரங்கமாக வீடியோ எடுத்து, அவர்களை மிரட்டி தன் காமப்பசிக்கு விருந்தாக்கிக் கொள்கிற ------------- நடிப்பில் இன்னும் கொஞ்சம் மிரட்டல் அதிகமாக இருந்திருக்கலாம்.

நாயகன் மீது அக்கறை கொண்ட உறவுக்காரராக இமான் அண்ணாச்சி, தங்கையின் கணவராக சென்றாயன், நாயகியின் தோழியாக வினோதினி என மற்ற பாத்திரங்களில் வருகிறவர்கள் குறைவின்றி நடித்திருக்கிறார்கள்.
வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷின் இசையில் கண்ணால மயக்குறீயே செம கட்டையா; முன்னால சாஞ்சிப்புட்டேன் வாழ மட்டையா', லிக்கர் பாட்டில் ஒண்ணுடா' பாடல்கள் உற்சாகம் தர, உசிருக்குள்ள உன்ன வெச்சேண்டி' பாடல் இதமான தாலாட்டாய் மனதில் பதிகிறது. பின்னணி இசையில் காட்சிகளின் தேவையுணர்ந்து உழைத்திருப்பதையும் பாராட்ட வேண்டும்.

எளிமையான கதைக்களத்தை அதற்கேற்ற ஒளிப்பதிவால் மெருகேற்றியிருக்கிறார் கே.எஸ்.பழநி.

குடிப்பழக்கம் ஒருவனது வாழ்க்கையை எந்தெந்த விதங்களில் சின்னாபின்னமாக்கும் என்பதை எடுத்துச் சொல்லியிருக்கிற சமூக அக்கறைக்காகவும்,

அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டும் நபர்களை பெண்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை கற்றுத் தந்திருப்பதற்காகவும் படத்தின் இயக்குநரை பாராட்டலாம்.

Comments

Popular posts from this blog