நெடுநீர் ; விமர்சனம்
சிறுவயதிலே நட்பாக பழகும் ஒரு சிறுவனும், சிறுமியும் சூழலால துரத்தப்பட்டு தமது சொந்த கிராமத்தை விட்டு வெளியேறுகின்றனர். எங்கு செல்வது எப்படி செல்வது என எந்த இலக்குமின்றி பயணிக்கின்றனர். இந்த சூழலில் நள்ளிரவில் நடுவழியில் இருவரும் பிரிய நேர்கிறது.
எட்டு வருடங்கள் கழித்து கடலூரில் இருவரும் சந்திக்க நேர்கிறது.  ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராக உயிரைக் காப்பாற்றும் இடத்தில் அவள், உள்ளூர் தாதாவின் அடியாளாக உயிரைக் கொல்லும் இடத்தில் அவன்.

காதலுக்காக தாதாவை விட்டு விலகிச்செல்ல நினைக்கையில் தாத்தாவும் கோபப்படுகிறார்.. பழைய பகையும் அவனை துரத்துகிறது. அதிலிருந்து அவன் தப்பினானா ? இல்லை தாதாவின் கோபத்துக்கு ஆளானானா ? காதலர்கள் இணைந்தார்களா என்பதற்கு கிளைமாக்ஸ் விடை சொல்கிறது.

நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ராஜ்கிருஷ், சாது மிரண்டால் காடு கொள்ளாது, என்ற பழமொழிக்கு ஏற்றபடி அமைதியான முகமாக இருந்தாலும் ஆக்‌ஷன் காட்சிகளில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.  முதல் படம் போல் இல்லாமல் காதல் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளில் அளவாக நடித்து கவர்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை இந்துஜா, இயல்பான முகம். எந்தவித சினிமாத்தனமும் இன்றி இயல்பாக நடித்திருக்கிறார்.
அண்ணாச்சியாக நடித்திருக்கும் மா.சத்யா முருகன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவதோடு, நடிப்பு, சண்டைக்காட்சி என அனைத்திலும் கவனிக்க வைக்கிறார். நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் நிச்சயம் கோலிவுட்டில் முக்கிய இடம் பிடிப்பார்.

நண்பனின் கொலைக்காக நாயகனை பழி தீர்க்க துடிக்கும் எச்.கே.மின்னல் ராஜா உள்ளிட்ட இளைஞர்களும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.  மற்ற வேடங்களில் நடித்திருக்கும் மதுரை மோகன் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

லெனின் சந்திரசேகரனின் ஒளிப்பதிவில் கடலூர் அழகையும், கடலின் அழகையும் ரசிக்க முடிகிறது.  ஹித்தேஷ் முருகவேல் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

இந்தப்படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கும் கு.கி.பத்மநாபன் காதல் கதையை ரவுடிசம் பின்னணியில் நேர்த்தியாக கொடுத்திருக்கிறார். புதுமுகங்களை வைத்துக்கொண்டு தான் சொல்ல வந்த கதையை மிக இயல்பாக சொல்லியிருப்பவர், காதல் கடலைப்போன்று பிரமாண்டமானது என்பதை மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

எளிமையான பின்னணியில் இப்படி ஒரு தாதாயிச படத்தை கொடுக்க முடியுமா என ஆச்சர்யப்பட வைத்துள்ளார் இயக்குனர் கு.கி.பத்மநாபன்.

Comments

Popular posts from this blog