’கடமை’ திரைப்பட விமர்சனம்
நேர்மையான காவல் துறை அதிகாரியான நாயகன் சீராளன், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபடும் கொடூரமான குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்து சட்ட ரீதியாக தண்டனை பெற்றுத்தர முயசிக்கிறார். ஆனால், காவல்துறையிலும், சட்டத்துறையிலும் இருக்கும் லஞ்ச பேர்வழிகளால் குற்றவாளிகள் வழக்குகளில் இருந்து தப்பித்து விடுகிறார்கள். இப்படி தொடர்ந்து பல வழக்குகளில் தோல்வியடையும் நாயகன் சீராளன், பணி ஓய்வு பெற்ற பிறகுகும் தனது கடமையை செய்ய துடிக்கிறார். அதன்படி, திட்டம் போட்டு தனி மனிதராக குற்றவாளிகளை சீராளன் களை எடுக்க, காவல்துறை அவரை கட்டம் கட்டி தூக்குவதோடு, அவரால் கொலை செய்யப்பட்டவர்களை உயிருடன் அவர் கண் முன் நிறுத்துகிறது.

தன்னால் கொலை செய்யப்பட்ட குற்றவாளிகள் உயிருடன் இருப்பது எப்படி? என்று குழப்பமடையும் சீராளனின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருந்தது, இறந்தவர்கள் எப்படி உயிருடன் வந்தார்கள், அப்படியானால் சீராளனால் கொலை செய்யப்பட்டவர்கள் யார்? போன்ற கேள்விகளுக்கான விடை தான் ‘கடமை’.

நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் சீராளன், காவல்துறை அதிகாரி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். அதீத நடிப்பு ஆசையுடன் அதிரடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சீராளன், வசனம் பேசுவதில் காட்டிய மெனக்கெடலை கொஞ்சம் நடிப்பிலும் காட்டியிருக்கலாம். அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய வயதில் கதாநாயகனாக நடித்திருப்பதோடு, டூயட், ஆக்‌ஷன் என அனைத்திலும் அசத்த நினைத்த அவரது தைரியத்தை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.

நாயகியாக நடித்திருக்கும் சந்தியா, போலீஸ் சீருடையில் கம்பீரமாகவும், மாடர்ன் சீருடையில் கவர்ச்சியாகவும் தெரிகிறார். கொஞ்சம் காதல் காட்சி, கொஞ்சம் போலீஸ் காட்சி என்று அவரது வேலை குறைவாக இருந்தாலும், அதை  குறையில்லாமல் செய்திருக்கிறார்.

பீமாராவ், இயக்குநர் சுக்ரன் சங்கர், தேவராஜ் சுப்ரமணியம், பேன் சி.கோபி, டெலிபோன் தேவா, கோடம்பாக்கம் நாகராஜ், பிரபாகரன், சரோஜாதேவி, நிம்மி, சி.பி.அசோக்குமார் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகள் அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும் திரைக்கதையோட்டத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் பிரசாத் கணேஷின் இசையும், ஒளிப்பதிவாளர் பாபுவின் கேமராவும் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறது. குறிப்பாக கதைக்கு சம்மந்தம் இல்லை என்றாலும் படத்தின் அனைத்துக் காட்சிகளும் நள்ளிரவில் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளது.

எழுதி இயக்கியிருக்கும் சுக்ரன் சங்கர், ஹீரோவுக்காகவும், கொடுக்கப்பட்ட பட்ஜெட்டுக்காகவும் ஏற்றபடியான ஒரு கதையை மிக எளிமையாக படமாக்கியிருக்கிறார். சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி குற்றவாளிகள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதையும், நிரபராதிகள் எப்படி தண்டிக்கப்படுகிறார்கள் என்பதை காட்டமாக சொல்ல முயற்சித்திருப்பவர்,  நீதிபதிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு குற்றவாளிகளுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குகிறார்கள், என்பதை காட்சியாக வைத்து லஞ்ச பேர்வழிகளுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.

மிகப்பெரிய ஆக்‌ஷன் படமாக எடுக்க வேண்டிய கதையாக இருந்தாலும், எளிமையான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் மூலம் ஒரு வட்டத்திற்குள் அதை சுருக்கி சொல்லியிருக்கும் இயக்குநர் சுக்ரன் சங்கர், மேக்கிங் மூலம் மிரட்ட தவறினாலும், தான் சொல்ல வந்த விசயத்தை நேர்த்தியாக சொன்னதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

Comments

Popular posts from this blog