மனிதன் தெய்வமாகலாம்’ - விமர்சனம்
மனிதன் தெய்வமாகலாம்’ - விமர்சனம்
சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்வயல் கிராமத்தில் வசிக்கும் செல்வராகவன் நுங்கு வியாபாரம் செய்து வருகிறார். செல்வராகவன் - குஷி இருவருக்கும் திருமணம் நடக்கிறது. இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் பெரியவர் ஒருவர் எம் எல் ஏ ஒய்.ஜி.மகேந்திரனிடம் மனு ஒன்றை கொடுக்கிறார்.
செல்வராகவன் தன்னை நம்பி திருமணம் செய்து கொண்ட பெண்ணை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பலரிடம் கடன் வாங்கி நெடுஞ்சாலை அருகே சிறிய உணவகம் ஒன்றை தொடங்குகிறார். இப்படி இவர்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது.
இதே சமயம் எம் எல் ஏ வின் மச்சான் மைம் கோபி தொழில் சாலை ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு வேலை பார்க்கும் ஏழை பெண்களுக்கு பணத்தை வட்டிக்கு கொடுத்து அதை திருப்பி செலுத்தாத முடியாத பெண்களை கற்பழித்து விடுகிறார். இந்நிலையில் சாலை வசதி சரி இல்லாததால் செல்வராகவன் வீட்டின் அருகே இருக்கும் சிறுமி இறக்கிறார்.
இதனையடுத்து செல்வராகவன், பெரியவருடன் சென்று எம் எல் ஏவை பார்த்து மனு கொடுக்கிறார். இதனால் மைம் கோபிக்கும் செல்வராகவனுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இந்நிலையில் செல்வராகவன் மனைவி கர்ப்பம் அடைகிறார்.
இதே சமயம் திடீர் என செல்வராகவன் மனைவி குஷி தற்கொலை செய்து கொள்கிறார். இறுதியில் செல்வராகவன் மனைவி தற்கொலைக்கு காரணம் என்ன ? என்பதை கண்டுபிடித்தாரா ? இல்லையா? அந்த ஊருக்கு சாலை வசதி கிடைத்ததா ? இல்லையா? என்பதே ‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் மீதிக்கதை.
கதைநாயகனாக நடித்திருக்கும் செல்வராகவன் எளிய கிராமத்து மனிதராக வாழ்ந்திருக்கிறார். மனைவி மீது காட்டும் அன்பு, 50 ஆயிரம் ரூபாய் தேவை என்றதும் கையில் இருக்கும் பணத்தை கொடுத்து விட்டு எதற்கு என்று கேள்வி கேட்காத குணம், பக்கத்து வீட்டு குழந்தையிடம் காட்டும் பாசம், அக்கா குடும்பத்திற்கு காட்டும் அக்கறை , அமைதியாக இருப்பவர் இறுதி காட்சியில் காட்டும் ஆக்ரோஷம் என அனைத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை குஷி ரவி, அழகு , நடிப்பு, திறமை என அனைத்தையும் சரி சமமாக கொடுத்து அனைவரின் கவனத்தை கவர்கிறார். படத்தின் இறுதிக்காட்சியில் அனைவரின் மனதில் இடம் பிடிக்கிறார்.
செல்வராகவனின் அக்காவாக நடித்திருக்கும் கெளசல்யா கதை அடுத்த கட்டத்திற்கு நகர துணை நிற்கிறார். அவரது கணவராக நடித்திருக்கும் ஆர்.எஸ்.சதீஷ், பாசக்காரராகவும் உணர்வு பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
எம் எல் ஏ வாக நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன் நல்ல அரசியல் தலைவராக வாழ்ந்திருக்கிறார். கந்துவட்டி கொடுப்பவராக நடித்திருக்கும் மைம் கோபி கொடூர குணம் கொண்ட கதாபாத்திரத்தில் பொருந்தியிருக்கிறார்.
சிறுமி லிர்திகா, சேலம் தீபக் என படத்தில் மற்ற கதாபத்திரத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஏ.கே.பிரியனின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பக்க பாலாக இருக்கிறது. ரவி வர்மாவின் ஒளிப்பதிவு, கிராமத்து அழகை அழகாக படமாக்கியிருக்கிறார்.
அடிப்படை வசதி இல்லாத கிராமத்தை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத், இத்திரைப்படத்தில் கந்துவட்டி கொடுமை, பாலியல் தீண்டல், கணவன் - மனைவி புரிதல் ஆகியவற்றை பற்றி இத்திரைப்படம் பேசியிருக்கிறது. ஆரம்பம் முதல் இறுதிவரை கிராமத்து கதையோடு நம்மை பயணிக்க வைத்திருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
நடிகர்கள் : செல்வராகவன், குஷி ரவி, ஆர்.எஸ்.சதீஷ், கெளசல்யா, மைம் கோபி,
இசை : ஏ.கே.பிரியன்
இயக்கம் : டென்னிஸ் மஞ்சுநாத்
மக்கள் தொடர்பு : ரேகா
Comments
Post a Comment