செல்லமடா நீ எனக்கு விமர்சனம்
அம்மா - மகன் பாசப்பிணைப்பில் உருவாகியிருக்கும் படம்.
செல்வாவுக்கு அப்பா இல்லை. அம்மாவுடன் ஒரே வீட்டில் வசித்தாலும் அவளுடன் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. அத்தோடு நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை; அவளை தன் எதிரியாகவே நினைக்கிறான். சில நேரங்களில் அவள் மனம் நோகும்படியும் நடந்து கொள்கிறான். அப்படியிருப்பவன் அதே வீட்டில் வசிக்கிற, தன் அம்மா வயதிலிருக்கிற பெண்மணியை சொந்த அம்மாவாக நினைத்துப் பழகுகிறான். ஆத்தா ஆத்தா என்று அழைத்து பாசத்தைப் பொழிகிறான். அந்த ஆத்தாவும் செல்வாவை சொந்த மகனைப் போல் கவனித்துக் கொள்கிறார்.
இப்படியாக துவங்கும் கதை நமக்குள், அம்மாவை பிள்ளை விரோதியாக நினைக்கும் அளவுக்கு அவர்களுக்குள் என்ன நடந்திருக்கும்? செல்வாவின் அப்பா எங்கே? அவருக்கு என்னவானது? செல்வா அம்மாவாக நினைக்கிற ஆத்தா யார்? என்ற கேள்விகளை எழுப்ப, அதற்கெல்லாம் பதில் தரும் விதமாக திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் ஆனந்த் சிவம்.
செல்வாவாக சினிமா ஹீரோக்களுக்கான அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்கும் வசீகரன். ஆரம்பத்தில் நண்பர்களுடன் ஜாலியாக பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தாலும் பின்னர் பொறுப்பாக ஒரு வேலை தேடிக் கொண்டு ஈடுபாடாக உழைப்பது, அம்மாவை ஒழுக்கம் கெட்டவளாக நினைத்து வெறுப்பு காட்டிக் கொண்டிருப்பது, காதலியுடன் உற்சாகமாக வலம் வருவது என தனக்கான காட்சிகளில் இயல்பாக நடித்திருக்கும் அவர் அம்மாவை பற்றி முழுமையாக தெரிந்துகொண்ட பின் குற்ற உணர்ச்சியுடன் கலங்கிக் கதறும்போது நெகிழ வைக்கிறார்.
அம்மாவாக, ஒரு கண் அகற்றப்பட்ட தோற்றத்தில் 'பசங்க' செந்தி. மகனின் நடவடிக்கைகளை அவன் பார்வையில் படாமல் மறைந்திருந்து கவனிப்பது, சில சந்தர்ப்பங்களில் அவன் காட்டும் வெறுப்பை மனம் கலங்கியபடி கடந்துபோவது என தேர்ந்த நடிப்பைத் தந்திருக்கும் அவர், ஒரு கண்ணில்லாமல் இருப்பதற்கான காரணத்தை தெரிந்துகொள்ளும்போது தாய்ப்பாசம் என்பது எத்தனை உயர்வானது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. தவறான வழியில் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் ஒருவரை, அவர் திருந்திவிட்டதாக நினைத்து கல்யாணம் செய்துகொண்டு ஏமாற்றத்தைச் சந்திக்கிற கனமான தருணங்களும் கதையில் உண்டு.
ஹீரோவை காதலித்து பாடல்களில் ஆடுவதோடு, ஹீரோவின் தவறுகளை சுட்டிக்காட்டவும் செய்கிறார் ஹீரோயின் நேகா.
கதாநாயகனின் தந்தையாக போஸ் வெங்கட் திருடனாக, கொலைகாரனாக நடிப்பு கச்சிதம். ஹீரோவுக்கு நண்பனாக வருகிற அமுதவாணன் உள்ளிட்டோர் கதைக்குத் தேவையானதை செய்திருக்கிறார்கள்.
தாஜ்நூர் இசையில் 'இவன்தாண்டா இவன் தாண்டா', ' குலக்கொழுந்தே', 'கருசுமந்த தாயவளை' என ஐந்தாறு பாடல்கள்
கதை நிகழும் தேவகோட்டையை பல கோணங்களில் சுற்றிக் காட்டுகிறார் ஒளிப்பதிவாளர் செல்வா. ஆர்.
வலிமையான கதையை எளிமையான முறையில் சொல்லியிருக்கின்றனர்.
Comments
Post a Comment